புதுச்சேரி அரசு, விரைந்து புயல் நிவாரணம் வழங்கியதை கண்டு வியப்பதாக, இங்கிலாந்து நாட்டு துணை தூதர் பாராட்டினார்.
சென்னையிலுள்ள, இங்கிலாந்து நாட்டு துணை துாதர் ஹலிமா ஹாலந்த், புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, துணை துாதரக ஹலிமா ஹாலந்த் பேசும்போது, தங்களது தலைமையிலான அரசு, செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக, மக்களிடையே வரவேற்பை பெற்றவையாக உள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, பெஞ்சல் புயல் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொண்டது மட்டுமல்லாது, மக்களுக்கு அறிவித்த இழப்பீட்டு தொகையையும் உடனடியாக அளித்தது, எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இதை எப்படி செய்தீர்கள் என, முதல்வர் ரங்கசாமியிடம் வினவினார். அதற்கு முதல்வர் ரங்கசாமி, எனது அரசு மக்களுக்கான அரசு. சொன்னதை செய்யும் அரசாக உள்ளது. மக்கள், எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே இது முடிந்தது என்றார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில், புதுச்சேரி சிறந்து விளங்குவதை நாங்கள் அறிவோம். உங்களுடைய மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என்றார்.
No comments